I personally typed the below kantha shasti kavasam from the original book. Hope its is useful .
கந்தர் சஷ்டி கவசம்
மூலம்
காப்பு
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோந் துன்பம்போ நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் டலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங்கை கூடு நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசந் தன்னை
குரல் வெண்பா
அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி
நூல்
நிலைமண்டில ஆசிரியப்பா
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவஞ் செங்கதிர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மைய னடஞ்செயும் மயில்வா கனனார்
கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா! வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனா சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹ வீரா! நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா ! வருக
என்னை யாளு மிளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயுங் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக
ஆறு முகமும் அணிமுடி யாறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈரறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நாலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து ! மயிலோன் விந்து !
முந்து முந்து முருகவேண் முந்து !
என்றனை யாளும் ஏரகச் செல்வ!
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்
றுன்றிரு வடியை உறுதியென் றெண்ணும்
என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வே லிரண்டு கண்ணிணைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை யிரத்ந வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரெண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரெண்டும் ஆயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்ட குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கான் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரணவேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா னாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க
அறையிரு டன்னில் அனையவேல் காக்க
ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி னோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைக டின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களை தொடரும் பிரமரா க்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டெரி இத்துன்ப சேனையும்
எல்லினு மிருட்டிலும் எதிர்படு மண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளங்களும்
என்பெயர் சொலவும் இடிவிழுந் தோடிட
ஆணை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைக ளென்பு
நகமு மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஓட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஒதுமஞ் சனமும் ஒருவழிப் பொக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றான் வஞ்சகா வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கணடாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினிற் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கள் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற்செதி லாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் றணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெருண்டது வோட
புலியு நரியும் புன்னரி நாயும்
எலியுங் கரடியும் இனித்தொடர்ந் தோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழுலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா
மண்ணு ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத துதிக்க உன்றிரு நாமம்
சரஹண பவனே ! சைலொளி பவனே!
திரிபுர பவனே ! திகழொளி பவனே!
பரிபுர பவனே பவமொளி பவனே !
அரிதிரு மருகா! அமர பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா! குகனே! கதிர்வே லவனே !
கார்த்திகை மைந்தா! கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேன் முருகா!
தனிகா சலனே ! சங்கரன் புதல்வா!
கதிர்கா மத்துறை கதிர்வேன் முருகா!
பழநிப் பதிவாழ் பால குமாரா!
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா !
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா!
சமர புரிவாழ் சண்முக தரசே !
லாரர் குழலாய் கலைமக ணன்றாய்
ஏன்னா விருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினே னாடினேன் பரவச மாக
ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியி லணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடை னிரக்ஷி! அன்னமுஞ் சொன்னமு
மெத்தமெத் தக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குகை மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைக ணீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவ னீகுரு பொறுப்ப துண்கடன்;
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே;
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தெனன் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் ரெட்டியார் தழைத்திட வருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் றேவ ராயன் பகர்ந்ததைக்
காலையின் மாலையிற் கருத்துட னாளும்
ஆசா ரத்துடன் அங்கங் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஒதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர்;
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் ;
நவகோண் மகிழ்ந்து நன்மை யளித்திடும்;
நவமத நெனவும் நல்லெழில் பெறுவர்;
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்;
கந்தர்கை வேலாங் கவசதி தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்;
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்;
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்;
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்திர சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகக்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்ற
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திருமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே !
மயினட மிடுவோய் ! மலரடி சரணம் ;
சரணஞ் சரணஞ் சரஹண பவஓம்
சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்.
கந்தர் சஷ்டி கவசம் மூலம் முற்றிற்று
Comments
Post a Comment